


தூத்துக்குடி: காவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
தமிழக அரசு உத்தரவுப்படி காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பொதுமாறுதல் வழங்குவது வழக்கம்.
3 ஆண்டுகளுக்கு மேல் ஓரு காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் துறையினர் இதற்கு முன்பு பணியாற்றிய காவல் நிலையங்களில் அவர்கள் செய்த பணியின் அடிப்படையிலும், இதற்கு முன்பு அவர்கள் எந்தெந்த காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளனர் என்பதன் அடிப்படையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமாறுதல் வழங்குவது வழக்கம்.
ஆனால் தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்ற வருடம் கலந்தாய்வு மூலம் சம்மந்தப்பட்ட காவல் துறையினர் அனைவரையும் அழைத்து, அவர்களிடம் நேரடியாக கேட்டு, காவல் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பொதுமாறுதல் வழங்கினார். அதே போன்று தான் உதவி ஆய்வாளர்களுக்கும் கலந்தாய்வு மூலம் தான் பொதுமாறுதல் வழங்கப்பட்டது.
அதன்படி இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், போக்குவரத்துப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவணக்கூடம், மாவட்ட குற்றப்பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, காவல் கட்டுப்பாட்டு அறை, நில மோசடி சிறப்பு தடுப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உட்பட 67 காவல் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரையுள்ளவர்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் பணி மாறுதல் கேட்டிருந்தவர்கள் என 340 பேர் கொண்ட பொதுமாறுதல் பட்டியல் தயார் செய்யப்பட்டு இன்று 4.7.21 கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இளங்கோவன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் முன்பு நடைபெற்றது.
இக்குழுவின் மூலம் காவல் துறையினரின் விருப்பங்களை நேரடியாக கேட்டறிந்து காவல் நிலையங்களில் ஏற்கனவே காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணியிடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல் வழங்கி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் குழு உறுப்பினர்களாக திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், டி.எஸ்.பி.கள் பொன்னரசு, விளாத்திகுளம் பிரகாஷ், மணியாச்சி சங்கர், கோவில்பட்டி உதயசூரியன், மாவட்ட குற்றபிரிவு ஜெயராம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு பாலாஜி, ஆயுதப்படை கண்ணபிரான், மாவட்ட காவல் அமைச்சு பணி நிர்வாக அதிகாரி சங்கரன், அலுவலக கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் உமையொருபாகம் மற்றும் பொது மாறுதலுக்கான காவல் துறையினர் உட்பட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
