Police Department News

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

ஜம்மு-காஷ்மீரில் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய இடங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள், அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் டிரோன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம், விமான நிலையம் அமைந்து உள்ளதால் அந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க விடுவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகளில் டிரோன்கள் மூலம் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உரிய அனுமதி பெற வேண்டும். தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்கவிடுவதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் கூறும்போது, ‘‘தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளதால், டிரோன்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். தற்போது இதனை தீவிரமாக கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தடையை மீறி யாரேனும் டிரோன்கள் பறக்கவிடுகிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். விதிமுறை மீறி பறக்கவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்

Leave a Reply

Your email address will not be published.