திருச்செந்தூரில், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடி ஆய்வு
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது அரசு அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் கோவில் வழிப்பாடுகளுக்கு இன்று முதல் அனுமதியளிக்கபட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு கடந்த 14.5.21 அன்று முதல் கோவில்களில் தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இன்று முதல் கோவில்களில் தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அவர்கள் இன்று 5.7.21 திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு இன்று முதல் பொதுமக்களுக்கு கோவில் வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்பேரில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்களும், பக்தர்களும் இன்று காலை முதல் தரிசனம் செய்கிறார்கள். அதற்காக காவல் துறை சார்பில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவோ, பழம் தேங்காய் உடைக்கவோ அனுமதியில்லை என்றும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள். தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்வின் போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன் உட்பட காவல் துறையினர் உடனிருந்தனர்.