

நாட்டு வெடிகுண்டு பறிமுதல் – எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து காவல் நிலைய பகுதியிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுமுன்தினம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில், உதவி ஆய்வாளர்கள் சங்கர், சரண்யா, தலைமைக் காவலர் முத்துராஜ், முதல்நிலை காவலர் பாலக்குமார், காவலர்கள் சிலம்பரசன் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தாளமுத்துநகர் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தாளமுத்துநகர் கோமஸ்புரம் வடக்கு பகுதியிலுள்ள பாலத்திற்கு அடியில் தூத்துக்குடி நயினார்புரத்தை சேர்ந்த கொம்மையா மகன் யமஹா முருகன் வயது 38, ஜேம்ஸ் மகன் ஜான்சன் பெலிக்ஸ் வயது 25. மற்றும் சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர். அவர்களில் யமஹா முருகன் மற்றும் ஜான்சன் பெலிக்ஸ் ஆகிய இருவரை பிடித்தனர். அப்போது அவர்கள் இரு நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தனர். மேற்படி இருவரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேற்படி எதிரிகள் இருவரையும் கைது செய்து நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டினார்
