தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1700 கிலோ பறிமுதல்: எஸ்.பி. பாராட்டு
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி வடபாகம் காவல் எல்லைக்குட்பட்ட கருத்தப்பாலம் பகுதியில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் டவுன் டி.எஸ்.பி. கணேஷ் வழிகாட்டுதலின் பேரில் வடபாகம் ஆய்வாளர் அருள், எஸ்.ஐ. சிவராஜா, தனிப்படை எஸ்.ஐ. வேல்ராஜ், தலைமை காவலர் பொன்ணிங், முதல்நிலை காவலர்கள் மாணிக்கராஜ், சாமுவேல்ராஜ், மகாலிங்கம், காவலர்கள் செந்தில், திருமணிராஜன், முத்துப்பாண்டி உள்ளிட்டோர் இன்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலோடு வாகனத்தை ஓட்டி வந்த விளாத்திக்குளம், குளத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (34). என்பவரை மடக்கி, வாகனத்தை சோதனை செய்ததில், அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 50 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி தனிப்படையினர் அவரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், மேலும் தூத்துக்குடி வட்டக்கோவில் அருகே மற்றொரு மினி லாரியில் 37 மூட்டைகள் வைத்திருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில், தனிப்படையினர் அங்கு சென்று அவற்றையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1700 கிலோ எடை கொண்ட 2,50,968 பாக்கெட்டுகள் அடங்கிய 87 மூட்டைகளிலிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், அதற்கு பயன்படுத்திய 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.14 லட்சம் ஆகும்.
மேலும் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினர் எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.