மதுரை மாநகராட்சி மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்!
தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் மேயர் மீது புகார்
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மேயர் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
மதுரை மாநகராட்சியில் மேயர் முன்னிலையிலேயே எந்தவித பாதுகாப்பு உபகரணமுமின்றி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய பணியாளர்களை ஈடுபடுத்திய விவகாரத்தில் மேயர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் மண்டலம் 3 இல் 59வது வார்டுகுட்பட்ட ரயில்வே காலனி பகுதியில் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியை மேயர் இந்திராணி பார்வையிட்டார். இந்த சிறப்பு தூய்மை பணி நடவடிக்கையின் கீழ் வாய்க்கால் தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் தொட்டியில் அடைப்பு நீக்கி பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கழிவுநீர் தொட்டி அடைப்பை சரி செய்வதற்கு இயந்திரம் பயன்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், அதை கையாளும் தூய்மை பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்காமல் இருந்தது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. மேயர் முன்னிலையிலேயே தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது ஊடகங்களில் வெளியாகி மதுரை மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு உள்ளானது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் இந்த விவகாரம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்
அதில், “மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ஆய்வு மேற்கொண்ட போது பட்டியலினத்தை சார்ந்த தூய்மை பணியாளர் காலில் காலணி அணியாமலும், கையுறை அணியாமலும் பணி செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதிகாரிகள் முன் இச்சம்பவம் நடந்து உள்ளதால் வன்கொடுமை குற்றத்திற்கு இது சமம். மனித மாண்புக்கு மனித உரிமைக்கும் எதிரான செயல். இந்த இடத்தில் தீண்டாமை அரங்கேறியுள்ளது. மனித கழிவுகளை மனிதனே அகற்ற மத்திய அரசு சார்பில் விதிக்கப்பட்ட தடை சட்டம், உச்சநீதிமன்ற உத்தரவுகள் எதையும் பின்பற்றப்படவில்லை என்பதால் மேயர் இந்திரானிக்கு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.