போலீசார் முன்பு நடனமாடி இளம் பெண் ரகளை.
சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் முககவசம் அணியாமல் நடைமேடையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர், அந்த பெண்ணுக்கு அபராதம் விதித்தார்.
இதையடுத்து அந்த இளம்பெண் கையில் வைத்திருந்த முககவசத்தை அணிந்து கொண்டு, அபராதம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அபராதம் விதித்ததில் உறுதியாக இருந்தார். இதனால், அந்த இளம்பெண், டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாரும் அந்த பெண்ணை அபராதம் கட்டியே தீர வேண்டும் என தெரிவித்தனர்.
இதனால், திடீரென நடனம் ஆடிய அந்த இளம்பெண் போலீசாரை கேலி செய்து, வம்புக்கு இழுத்து சீண்டினார். ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’, ‘உன்ன விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டு பாடிக்கொண்டும், ரெயில் நிலையத்தில் குத்தாட்டம் போட்டும் அட்டகாசம் செய்தார். அந்த பெண்ணை அங்கிருந்த பயணிகள் சிலரும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அந்த இளம்பெண் சமாதானம் ஆகவில்லை.
தொடர்ந்து நடைமேடையில் தனது பையை மாட்டிக்கொண்டு அங்கும் இங்குமாக நடனமாடிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணும் அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டு, அபராதம் செலுத்தினார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த பெண் நடனமாடி போலீசாரை சீண்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது