
மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து; உ.பி. தொழிலாளி பலி:
மதுரை நாராயணபுரத்தில் 7 கி.மீ., தொலைவிற்கு ரூ.679.98 கோடியில் தமிழகத்திலேயே மிக நீளமாக கட்டப்படும் பறக்கும் பாலம் கட்டுமானப்பணியில் 35 மீட்டர் நீளம் கொண்ட இணைப்புப் பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், உத்திரப் பிரதேச தொழிலாளர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
மதுரையிலிருந்து நத்தம் வரை மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 28 கி.மீ., தொலைவிற்கு ரூ.1,020 கோடியில் புதிதாக நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது.
இந்தச் சாலையில் நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே தல்லாக்குளத்தில் இருந்து ஊமச்சிக்குளம் அடுத்த செட்டிகுளம் வரை ரூ.7.3 கி.மீ., தொலைவிற்கு பிரம்மாண்ட பறக்கும் பாலம் ரூ.679.98 கோடியில் கட்டுமானப்பணி 2018ம் ஆண்டு தொடங்கியது.
இந்த பறக்கும் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் வகையில் வழிநெடுக 192 பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படுகிறது. மதுரையில் இருந்து நத்தம் வழியாக திருச்சி செல்வதற்கு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், 20 கி.மீ., தொலைவு பயண தூரத்தைக் குறைக்கவும், இந்த பறக்கும் பாலமும், நான்கு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது.
மதுரை மாநகரில் 7.3 கி.மீ., தொலைவிற்கு அமையும் இந்த பறக்கும் பாலத்திற்காக 192 தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் பாலத்தில் விஷால் மால், மாநகராட்சி நுழைவு வாயில், திருப்பாலை மின்வாரிய அலுவலகம், நாராயணபுரம் ஆகிய 4 இடங்களில் வாகனங்கள் ஏறி, இறங்கும் வசதியுடன் இணைப்பு பாலமும் கட்டப்படுகிறது. இந்த பாலம் கட்டுமானப்பணியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பறக்கும்பாலம் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே அதன் கீழ் ஒரு பகுதியில் நகரப்போக்குவரத்து எந்த சிக்கலும் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது. அதில் டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தன.
தமிழகத்திலே மிக நீளமான பாலமாக கட்டப்படும் இந்த பாலம் செக்மென்ட் வகை(segmental type) தொழில்நுட்பத்தில் கட்டப்படும் முதல் பாலமாக கருதப்படகிறது.
போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இந்த பறக்கும் பாலத்தில் அதன் வளைவுகள், இடத்தை பொறுத்து 35 மீட்டர் இடைவெளியில் பிரமாண்ட தூன்கள் அமைக்கப்படுகிறது. இதில், மதுரை நாராயணபுரத்தில் பிரதான பாலத்தின் இரு புறமும் வானகங்கள் ஏறவும், இறங்கவும் இணைப்பு பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது.
இப்பகுதியில் அமையும் இரு பிரம்மாண்ட இரும்பு தூன்களுக்கு இடையே 35 மீட்டர் நீளமுள்ள பல நூறு காங்கீரிட் கர்டர் பொருத்தும் பணி நடந்தது. இந்த கான்கீரிட் கர்டர் ஏற்கெணவே சில நாட்களுக்கு முன்பே பொருத்துவதற்காக பிரமாண்ட தூன்கள் மேலே இருத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இந்த கான்கீரிட் கர்டரை, பிரம்மாண்ட தூன்களுடன் நிரந்தரமாக இணைக்க பொறியாளர்கள் முன்னிலையில் ஏராளமான தொழிலாளர்கள் ஜாக்கிகளை கொண்டு உயர் தொழில்நுட்பத்தில் இணைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தொழில்நுட்பக் கோளாறால் சரியாக மாலை 5.15 மணியளவில் இரு தூன்களுக்கு இடைப்பட்ட 35 மீட்டர் நீளமுள்ள காங்கீரிட் கர்டர் கீழே சரிந்து விழுந்தது.
இதில் பல நூறு டன் எடை கொண்ட அந்த காங்கீரிட் கர்டர் இரண்டாக பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. கான்க்கீரிட் கர்டர் இடிந்து விழுவதை முன்கூட்டியே கனித்த பாலத்திற்கு கீழே வேலைப்பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். துரதிஷ்டவசமாக சில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் ஒருவர் இறந்துவிட்டார். வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்களா? என்பதை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போலீஸார், தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடிந்து விழுந்த இணைப்புப் பாலத்திற் கீழ் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் யாரும் சிக்கவில்லை.
