
சமூக வலைதளங்களில், தெரியாதவர்களிடம் உரையாடுவதோ, தகவல் பரிமாற்றம் செய்வதோ கூடாது என பள்ளி மாணவ, மாணவியருக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் சார்பில் எழும்பூரில் உள்ள மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதில்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:இந்தியாவிலேயே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானகுற்றங்களை குறைக்க காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவுடன் சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அம்மாரோந்து வாகனம் மூலம் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் 2 லட்சத்து 50 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியரிடம் வரம்பு மீறி நடப்பவர்கள் குறித்து போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டும். வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நல்ல நண்பர்களுடன் பழகுங்கள். சமூக வலைதளங்களில் முன் பின் தெரியாதவர்களிடம் உரை யாடுவதோ, தகவல் பரிமாற்றம் செய்யவோ கூடாது” என்றார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.