Police Department News

புத்தாண்டு கொண்டாட்டம் : “பூங்கா, கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை” – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

: புத்தாண்டு கொண்டாட்டம் : “பூங்கா, கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை” – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2022 புத்தாண்டு தினத்தை பூங்கா, கடற்கரை பகுதிகளில் கொண்டாட அனுமதி இல்லை எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
தற்போது பரவி வரும் உருமாறிய ஒமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆகவே நாளை (31.12.2021) இரவு மற்றும் 2022ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான சனிக்கிழமை அன்றும் தூத்துக்குடியில் உள்ள பீச் ரோடு, அங்குள்ள பூங்காக்கள், புதிய துறைமுகம், தெர்மல்நகர் பீச் மற்றும் கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செல்பவர்கள் கைது செய்து, பைக்குகளையும் பறிமுதல் செய்து, அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் ‘வீலிங்” செய்வது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மது அருந்தி பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டின்போது கோவில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். மேலும் பொது இடங்களிலும் கூட்டம் கூடுவதையும், தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.

புத்தாண்டு தினத்தன்று ஹோட்டல்கள் தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி இரவு 11 மணி வரை மட்டுமே செயல்படும். வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டின் தகவல்களை அருகிலுள்ள காவல் நிலையங்களில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர அவசர உதவி தேவைப்படுவர்கள் 100, மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை எண் 0461 2340393, ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டினை கொண்டாடவும், பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.