
தீ விபத்தில் சிக்கினால் எப்படி தப்பிப்பது, மற்றவர்களை, பாதுகாப்பாக எப்படி மீட்பது என்பது குறித்து, அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டடங்களில், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.
சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில், தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனையில், தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என, தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். செயற்கையாக, தீயை உருவாக்கி, அதை பாதுகாப்பாக அணைப்பது குறித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், பயிற்சி அளித்தனர்.
மாடி வீடுகளில் தீ விபத்து நிகழ்ந்து, சிக்கி இருப்போரை, தோளில் எப்படி சுமந்து வர வேண்டும் என்பது குறித்தும், தத்ரூபமாக செய்து காட்டினார்.அதேபோல, தீயணைப்பு கருவிகளை இயக்கும் முறைகள் குறித்தும், பயிற்சி அளித்தனர். வீடுகளில், காஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும், கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் விளக்கினர்.
தீயணைப்பு வீரர்கள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வேளச்சேரியில் உள்ள, வணிக வளாகம், ராயபுரம், பனைமரத்தொட்டி என்ற குடிசைப்பகுதி உட்பட, 15க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் கட்டடங்களில், நேற்று முன்தினம், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘இந்த நிகழ்ச்சி, மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ‘இதுபோன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் எந்த இடங்களில் நடக்க இருக்கிறது என்பது குறித்து, தீயணைப்பு துறையினர் முன் கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும். இதனால், அதிகம் பேர் பார்த்து, பயனடைய உதவியாக இருக்கும்’ என்றனர்.
