ஐ.பி.எஸ்., அதிகாரி கரன் சின்ஹா ஓய்வு
தீயணைப்பு துறை இயக்குனராக பணியாற்றிய டி.ஜி.பி., கரன் சின்ஹா ஓய்வு பெற்றார்.
உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கரன் சின்ஹா, 60. இவர், 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வானார். தமிழக காவல் துறையில், சென்னை போலீஸ் கமிஷனர் உட்பட பல முக்கிய பதவிகளில் பணியாற்றி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை குறித்து விசாரித்துள்ளார். மத்திய அரசு பணிகளிலும் இருந்துள்ளார். டி.ஜி.பி., ரேங்கில், தமிழக தீயணைப்பு துறை இயக்குனராக பணியாற்றிய இவர் நேற்று ஓய்வு பெற்றார். இவருக்கான பிரிவு உபசார நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது
அப்போது, கரன் சின்ஹாவுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. திறந்த ‘ஜீப்’பில் சென்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். போலீசாரின் பேண்ட் இசை குழுவினரும் மரியாதை செய்தனர்.நிகழ்ச்சியில், டி.ஜி.பி.,சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். அப்போது, சவாலான கால கட்டத்தில், கரன் சின்ஹா பணிபுரிந்த விதம், அவரது அறிவுத்திறன், பல்வேறு வழக்குகளில் புலனாய்வு செய்த விதம் பற்றி நினைவு கூர்ந்தனர்.
கரன்சின்ஹா பேசுகையில், ”வரலாற்று சிறப்புமிக்க தமிழக காவல் துறையில் பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறேன். ”மிகச்சிறப்பான முறையில் பணிபுரிந்தோம் என்ற மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன். ஒத்துழைத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அனைவருக்கும் நன்றி,” என்றார்.
இந்நிகழ்ச்சியில், காவலர் வீட்டு வசதி கழக டி.ஜி.பி.,யான ஏ.கே.விஸ்வநாதன், சிறைத்துறை டி.ஜி.பி., சுனில்குமார் சிங் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இயக்குனர் நியமனம்தமிழக மின்வாரிய முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாக டி.ஜி.பி., பிரஜ் கிஷோர் ரவி என்ற பி.கே.ரவி பணிபுரிகிறார். இவர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் புதிய இயக்குனராக நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.