விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்யலாமா?
விருப்ப இடமாறுதல் பெற்ற மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயனை மதுரை ‘மிஸ்’ செய்வது ஏன்?
கா.ப.கார்த்திகேயன்
மதுரை: மதுரை மாநகராட்சியின் 6-வது ஆணையாளராக மருத்துவரான கா.ப.கார்த்திகேயன் இருந்து வந்தார். இவர், தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கமிஷன் உறுப்பினர் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தெற்கு மண்டல ஆணையாளராக இருந்த சிம்ரன்ஜீத் சிங்கொலோன் தற்போது மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கா.ப.கார்த்திகேயன், மதுரையின் மாநகராட்சி ஆணையாளராக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது குடும்பம் சென்னையில் இருந்து வந்தது. இவர் மட்டுமே மதுரையில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சென்னை மாநகராட்சியில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தற்போது அவர் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியிலே எம்டி உயர் மருத்துவப்படிப்பு படிக்கிறார். அதனால், மேல் அதிகாரிகளிடம் விருப்ப இடமாறுதல் கேட்டு சென்னைக்கு பணியிடமாற்றம் பெற்றுசெல்கிறார். இவர், நிர்வாகத்தில் மிக நேர்மையாகவும், ஊழியர்களிடம் கனிவாகவும், அதே நேரத்தில் கண்டிப்புடன் பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஒரு ஆண்டாக மாநகராட்சி ஆணையாளராக மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் முதல் வரிவசூல், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் வரை பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை செய்துள்ளார். இவரது கண்டிப்பும், கெடுபிடியான கறாரான நடவடிக்கைகள் சமீப காலமாக உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பிடிக்கவில்லை.
மதுரை மாநகராட்சியில் எடுத்த சிறந்த நடவடிக்கையாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கியில் ஊதியத்தையும், அவர்களுக்கான ஈஎஸ்ஐ பணத்தை செலுத்த ஒப்பந்ததார்களுக்கு உத்தரவிட்டு அதை நடைமுறைப்படுத்தினார். அதற்கு ஒத்துழைக்காத ஒப்பந்ததார்களுக்கு மீண்டும் கான்டிராக்டர் வழங்க மறுத்தார். இறந்த மாநகராட்சி பணியாளர்கள் வாரிசுகள் 236 பேருக்கு பணிநியமனம் கிடைக்க ஏற்பாடு செய்தார். தூய்மைப்பணியாளர்களுக்கு அவர்களுக்கான நலவாரியம் இருப்பதே தெரியாமல் இருந்தனர். அவர்கள் 745 பேருக்கு நலவாரியத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தார். இதன்மூலம் அவர்கள் ஒய்வு பெற்றால் மாதம் ரூ.1,000 நலவாரியம் மூலம் பணபலன் கிடைக்கும்.
20 ஆண்டாக பதவி உயர்வு இல்லாமல் தவித்த மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க தடையாக இருந்த சட்டசிக்கல்களுக்கு தீர்வு கண்டு சீனியார்ட்டி பட்டியல் தயார் செய்து அதற்கு ஏற்பாடு செய்தார். பணி ஒய்வு மற்றும் பணியின்போது இறந்த மாநகராட்சிப் பணியாளர்கள் 92 பேர் பல ஆண்டாக ஒய்வூதியம் கிடைக்காமல் சிரமப்பட்டனர். அவர்களுக்கு ஒய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
பணிஒய்வு பெற்ற ஒய்வூதிய பணபலன்கள் கிடைக்காமல் மாநகராட்சியில் பணிஒய்வு பெற்றவர்கள் கடந்த 10 ஆண்டாக மிகவும் சிரமப்பட்டனர். அவர்களுக்கு 2017ம் ஆண்டு வரை பணிபுரிந்தவர்களுக்கு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்தார். 2017-18ம் ஆண்டில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற 50 சதவீதம் பேருக்கும் முழுமையான ஒய்வூதிய பண பலன்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
அதுபோல், கடந்த 5 ஆண்டிற்கு மேலாக பணி முடித்து அதற்கான பணம் கிடைக்காமல் ஒப்பந்ததார்கள் ஏராளமானோர் தவித்தனர். அவர்களுக்கு நிதி நெருக்கடியால் கரோனா காலத்தில் ஒட்டுமொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு 2018ம் ஆண்டு வரை முழுமையாக செய்த பணிகளுக்கு பணம் வழங்க ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார். தற்போது வரி உயர்த்தப்பட்டுள்ளதால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக ஒப்பந்ததார்களுக்கும், ஒய்வுபெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
பெரியார் கூட்டுக்குடிநீர் திட்டம் இடையில் ஓர் ஆண்டாக எந்த பணியும் நடக்காமல் முடங்கி கிடந்தது. கா.ப.கார்த்திகேயன் மாநகராட்சி ஆணையாளராக வந்தவுடன் இந்த திட்டத்தை தூசி தட்டி தேனியில் தடுப்பணை கட்டுவதற்கு இருந்த சிக்கலை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு இந்த திட்டப்பணிகள் தற்போது விரைவாக நடப்பதற்கு ஏற்பாடு செய்தார்.
அதுபோல், அடிப்படையில் இவர் மருத்துவர் என்பதால் மாநகராட்சி மருத்துவமனைகளை தரம் உயர்த்த ஏற்பாடு செய்தார். இதுபோல், பாதாளசாக்கடை பணி, தெருவிளக்கு, சாலைப்பணிகளை முடுக்கிவிட்டு அதனையும் முடுக்கிவிட்டு புதிய சாலைப் பணிகளை தரமாக போட வேண்டிய நேரத்தில் இவரை போன்ற நேர்மையான மாநகராட்சி அதிகாரி இடமாறுதலாகி செல்வதால் மதுரை மக்கள் கவலையடைந்துள்ளனர்.