
போதை மாத்திரைகள் விற்பனை செய்த சிறுவர்கள் கைது….. கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 2 சிறுவர்களை பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவையில் கல்லுரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதனால் போலீசார் மாணவர் விடுதி, இளைஞர்கள் தங்கக்கூடிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற 2 சிறுவர்களை பிடித்து சோதனையிட்டபோது, அவர்கள் போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, ஈரோட்டை சேர்ந்த 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 620 போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான 2 சிறுவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
