
லோன் ஆப்களை பயன்படுத்த வேண்டாம் – மக்களுக்கு சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள்!
லோன் ஆப் செயலிகள் மூலம் கடன் கொடுப்பதாக கூறி மோசடி நடைபெற்று வருவதாகவும் அதை நம்பி யாரும் கடன் பெற வேண்டாம் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டார்.
லோன் ஆப் செயலிகள் மூலம் மோசடி தொடர்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா பகுதிகளில் இருந்து நான்கு குற்றவாளிகள் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல மொபைல் சாட் அப்ளிகேஷன் மூலமாக பழகி ரூ. 56 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் இருவரும், கல்லூரி விரிவாக்கத்திற்கு ரூ. 200 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ. 6 கோடி மோசடி செய்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை காவல் ஆணையரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், லோன் ஆப் மூலம் கடன் வாங்கிய நபர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி வந்த நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த தீபக்குமார் பாண்டே (26), ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தேந்தர் தன்வர்(24) இவரது சகோதரி நிஷா(22), டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா (21) ஆகிய நான்கு அவர்களை கைது செய்துள்ளதாகவும் இவர்கள் வீட்டிலிருந்து மோசடி செய்து வரும் Work from Home குற்றவாளிகள் எனவும் தெரிவித்தார்.
50 பேர் கொண்ட கும்பலாக இவர்கள் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் மற்ற நபர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்தவர். இவர்களிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வங்கி கணக்குகளை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த மோசடி சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை கைது செய்யும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக பொதுமக்கள் யாரும் லோன் ஆப்புகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் எனவும் சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்தார். அதேபோல செல்போன் உரையாடல் செயலி மூலம் சந்தோஷ் குமார் என்ற நபரிடம் பழகி, சாப்ட்வேர் கம்பெனியில் கேண்டின் நடத்தும் காண்ட்ராக்ட் எடுத்து தருவதாக ரூ. 56 லட்சம் மோசடி செய்த கோவாவை சேர்ந்த சக்திவேல் மற்றும் பிரியா ஆகிய இருவரை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார்.
மேலும் கல்லூரி விரிவாக்கத்திற்காக ரூபாய் 200 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணா (எ) லயன் முத்துவேல்(44), சங்கர் (34), இசக்கியவேல் ராஜன் (37), சுதா (43) ஆகிய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து 120 சவரன் நகை 14 அசையா சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்திருப்பதாகவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
