Police Department News

சின்ன கடைகளைக் குறிவைத்தோம்!’ – சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கள்ளநோட்டுக் கும்பல்

சின்ன கடைகளைக் குறிவைத்தோம்!’ – சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கள்ளநோட்டுக் கும்பல்
தள்ளுவண்டிக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து சிக்கன் பக்கோடா வாங்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அரியலூர்- கல்லங்குறிச்சி சாலையில் இருக்கும் அரசு மதுபானக் கடை அருகே மாலை நேரங்களில் தள்ளுவண்டிக் கடை மூலம் சிக்கன் பக்கோடா விற்பனை செய்துவருகிறார். அரசு மதுபான கடைக்கு வரும் கூட்டத்தால், ராஜாவும் பிஸியாகவே இருப்பார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இருவர் பைக்கில் வந்து இறங்கினர். அவர்கள் கொடுத்த 500 ரூபாய் கள்ளநோட்டு எனத் தெரிந்ததும் ராஜா, போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், அவர்கள் இருவரும், திட்டக்குடி செல்ல வழிகேட்டார்கள். வழி காட்டினேன். ஆனால், பைக்கிலிருந்து இறங்கிய பிறகு இருவரும், 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து 100 ருபாய்க்கு, சிக்கன் பக்கோடா கேட்டார்கள். கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு சிக்கன் பக்கோடாவை மடித்துக் கொடுத்ததுடன், மீதி 400 ரூபாயைக் கொடுத்துவிட்டேன். மீதிப் பணத்தை வாங்கிய அவர்கள் இருவரும், பைக்கில் பறந்தனர். அவர்களின் நடத்தையில் சந்தேகப்பட்ட நான், ஒயின் ஷாப்பில் உள்ளவர்களிடம், அந்த 500 ரூபாயைக் கொடுத்து கேட்டேன். அவர்கள்தான், அந்தப் பணம் கள்ள நோட்டு என்றார்கள். அதன் பிறகும் சந்தேகம் விலகாத நான், என்னிடம் இருந்த 500 ரூபாய் நோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது வித்தியாசம் தெரிந்தது” என்றார். இதையடுத்து, புகாரை வழக்காகப் பதிவுசெய்து அரியலூர் போலீஸார் விசாரணையில், அந்த ரூபாய் நோட்டு கள்ள நோட்டுதான் என்பதை உறுதிசெய்திருக்கிறார்கள். அதையடுத்து, தப்பிச் சென்றவர்களை போலீஸார் விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கீழவளவு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்றும் மற்றொருவர் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பது தெரியவந்தது. ராஜாங்கம் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும், கடந்த சில தினங்களாக அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 500 மற்றும் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. தொடர்ந்து அரியலூரை அடுத்த கயர்லாபாத் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேல் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 500 மற்றும் 2,000 மதிப்பிலான 16 கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் ஆசிரியர் ராஜாங்கம்,குடும்ப வறுமையின் காரணமாக இப்படியான செயலில் ஈடுபட்டோம். கள்ள நோட்டுகளைப் பெரிய கடைகளில் கொடுத்தால் சிக்கிக் கொள்வோம் என்பதால், சிறு கடைகள் மற்றும் தள்ளுவண்டிக் கடைகளைக் குறிவைத்து மாற்றி வந்தோம். எங்களின் போதாத காலம் சிக்கிக்கொண்டோம்” என்றாராம்.
கைது செய்யப்பட்ட இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜாங்கம் மற்றும் ராஜேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார், அரியலூர் மாவட்டத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்திவருகிறார்கள்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்:திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.