Police Department News

விடாமல் தொல்லை கொடுத்த ஆன்லைன் லோன் ஆப்: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு

விடாமல் தொல்லை கொடுத்த ஆன்லைன் லோன் ஆப்: ஐ.டி ஊழியர் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் சிக்கி ஐ.டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. வாங்கிய கடனை செலுத்திய பின்னரும் கடனை கட்ட சொல்லி மிரட்டல் விடுத்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

சென்னை கே.கே நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த டெய்லர் சீனிவாசராஜா(53). இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா என இரு பிள்ளைகள் உள்ளனர். நரேந்திரன் பிகாம் படித்துவிட்டு பெருங்குடியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நரேந்திரன் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக 33 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பின்னர் ஆப்பில் கடனாக பெற்ற 33 ஆயிரம் ரூபாயை நரேந்திரன் திருப்பி செலுத்திய பின்னரும், மேலும் 33 ஆயிரம் ரூபாய் கடன் செலுத்த வேண்டும் என ஆன்லைன் லோன் ஆப் மோசடி கும்பல் பல முறை போன் செய்து மிரட்டியதால் நரேந்திரன் பயந்து போனார். மோசடி கும்பல் தொடர்ந்து ஆபாசமாக பேசி பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் நரேந்திரன் அவரது தந்தையிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயை பெற்று கடனை செலுத்தியுள்ளார்.

ஆனால் மீண்டும் மீண்டும் 50 ஆயிரம் செலுத்த வேண்டுமென லோன் ஆப்பில் இருந்து நரேந்திரனுக்கு போன் செய்து தொந்தரவு கொடுத்து வந்ததால் நரேந்திரன் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் நரேந்திரன் கடனை திருப்பி செலுத்துவதற்காக மற்றொரு லோன் ஆப்பிலிருந்து கடனை பெற்றுள்ளார். இதே போல கடந்த 15 நாட்களுக்குள் பல லோன் ஆப்பிலிருந்து சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை நரேந்திரன் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை கட்டமுடியாமல் திணறிய நிலையில் நரேந்திரனின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவரது செல்போன் தொடர்பில் இருந்த பெண்களுக்கு நரேந்திரனை கடனை செலுத்த சொல்லி மிரட்டினர்.

இந்த நிலையில் இன்று காலை நரேந்திரனின் பெற்றோர் துக்க நிகழ்வுக்காக வெளியே சென்ற நிலையில், நரேந்திரன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த கும்பல் நரேந்திரனின் தாய் வசந்திக்கு போன் செய்து உனது மகனை கடனை கட்ட சொல்லு என மிரட்டியதாக தெரிகிறது. உடனே வசந்தி தனது மகன் நரேந்திரனை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து உடனே தனது மருமகன் சதீஷ்சை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து சதீஷ் வீட்டிற்கு சென்று பார்த்த போது நரேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் தகவலறிந்து எம்ஜி.ஆர் நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.