

காரிமங்கலம் அருகே டெம்போவில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய ஆண் போல் வேடம் அணிந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்து 79 மூட்டை குட்கா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் எஸ்பி கலைச்செல்வன் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை அடுத்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் கும்பாரஹள்ளி செக்போஸ்டில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாகச் சென்ற டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக டெம்போவை ஓட்டி வந்த டிரைவரை அழைத்துச் சென்று விசாரித்த போது டெம்போவை ஓட்டி வந்தது ஆண் இல்லை பெண் என தெரிய வந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆண் போல் பேண்ட் சர்ட் அணிந்து கடத்தியதும் அவர் விழுப்புரத்தை சேர்ந்த நாகராஜனின் மகள் ஈஸ்வரி என்கிற ஈஸ்வரன் 35 என தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் கடத்தப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் டெம்போவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மதிப்பு ரூபாய் ஆறு லட்சம் ஆகும்.
