
எங்க அம்மாவ கைது பண்ணுங்க…. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த 3 வயது சிறுவன்
மத்திய பிரதேசத்தில் ஒரு சிறுவனின் அடம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு தந்தையுடன் 3 வயது சிறுவன் வந்துள்ளான். அப்போது அங்கிருந்த காவல் அதிகாரியிடம் தன்னுடைய அம்மா மீது புகார் கொடுக்க வேண்டும் என எந்த விதமான பயமும் இல்லாமல் கூறியுள்ளான்.
இதைக்கேட்ட அங்கிருந்த போலீஸார் அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த சிறுவனை பார்த்தனர். பின்னர் அவனது தந்தையிடம் என்ன என்று கேட்டபோது, “அவனின் அம்மா சாக்லேட் கொடுக்க மாட்டேன் என கூறியுள்ளார். நான் அலுவலகத்தில் இருந்த போது என்னை அழைத்து அம்மா மீது போலீஸில் புகார் கொடுக்க போரேன் என கூறினான்.
அப்போது நானும் சிரித்து விட்டு சரிடா என கூறிவிட்டேன்.பிறகு வீட்டிற்கு வந்தபோது,போலீஸ் ஸ்டேஷன் அழைத்து போங்க என அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். எவ்வளவு முயன்றும் அவனைச் சமாதானப்படுத்த முடியவில்லை.இதனால் அவனை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தேன்” என தெரிவித்தார்.
இதையடுத்து பெண் காவலர் ஒருவர் புகார் எழுதி வாங்குவதுபோல் நடித்து சிறுவனிடம் புகார் பெற்றுக்கொண்டார். அப்போது சிறுவனும் தனது அம்மா மீது புகார்களை அடுக்கொண்டே போனது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. பிறகு போலிஸார், சிறுவனிடம் ‘அம்மாவைக் கைது செய்துவிடுவோம் வீட்டிற்குப் போ’ என கூறிய பிறகே சிறுவன் தந்தையும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றார்.
