
மதுரை மாவட்டத்தில் வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆந்திரா கும்பலை மதுரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. தென்மண்டல ஐ.ஜி., அஸ்ராகர்க் பொறுப்பேற்ற பின், கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தார். இருப்பினும் ஆந்திராவில் இருந்து வாங்கி கஞ்சா விற்பது தொடர்ந்தது.
இந்நிலையில் சேடப்பட்டி அருகே கம்மாளபட்டி சுடுகாடு பகுதியில் 24 கிலோ கஞ்சாவுடன் அவ்வூரைச் சேர்ந்த சேதுராமன், மகன் ஆனந்த் 21, கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பொங்காராம் மெரகல்லு என்ற கிராமத்தில் அப்பாவு நாயுடு 26, என்பவரிடம் வாங்கி விற்றது தெரிந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் 240 கிலோ கஞ்சா, மதுரை மாவட்டத்தில் 160 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது. இவரது வாக்குமூலம் அடிப்படையில் கூட்டாளிகள் விசாகப்பட்டினம் தேவராஜ் 29, ராஜசேகர் 28, தாரே பால்வெங்கிட கிரிபாபு, ஹரீஷ் 29, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் 60 கிலோ கஞ்சா, இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்த தனிப்படையினரை ஐ.ஜி., அஸ்ராகர்க், டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி., சிவபிரசாத் பாராட்டினர்.
