
பேரையூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 64 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்பளிப்பு வாங்கப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சூரியகலா, அன்புரோஸ், குமரகுரு உள்ளிட்ட போலீசார் இங்கு சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகத்தில் பணியில் இருந்த 20 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் தாசில்தார் ரவி ஜீப்பில் 32,500 ரூபாய் இருந்தது. அங்கு பணிபுரியும் மற்றொருவர் 6000 ரூபாயை தூக்கி வீசினார். பீரோவில் இருந்த நோட்டுக்குள் 12,500 ரூபாய் மறைத்து வைத்திருந்தனர். மேலும் கணக்கில் வராத 13 ஆயிரம் ரூபாய் இருந்தது. மொத்தம் 64 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்த போலீசார், தாசில்தார் ரவி உள்ளிட்ட 5 பேரிடம் விசாரித்தனர்.
