தேவர் குருபூஜை விழாவில் விதி மீறிய 77 வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல்
–
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை அவர்கள் தெரிவித்ததாவது:- பசும்பொன் கிராமத்தில் கடந்த அக்டோபர் 28 முதல் 30-ந்தேதி வரை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜை விழாவையொட்டி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. விழாவில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்பு பிரதிநிதிகள், நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் அனுமதி சீட்டு பெற்று கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த உத்தரவை மீறி அனுமதி பெறாமல் நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களில் பசும்பொன்னுக்கு வந்தவர்கள் மீது, இதுவரை மொத்தம் 140 பேர் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிமீறல்களில் ஈடுபட்ட நான்கு சக்கர வாகனங்கள் 47, இருசக்கர வாகனங்கள் 30 என மொத்தம் 77 வாகனங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ய உட்கோட்டம் தோறும் தனிப்படை அமைத்து அதன் அடிப்படையில், தொடர்ந்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது. அது போலவே விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யவும் மற்றும் விதிமீறல் வாகனங்களை பறிமுதல் செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.