
பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உழவு பணியின்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த மகேந்திரமங்கலம் அருகே உள்ள செல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 46). விவசாயி மற்றும் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மனைவி சரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சரிதா பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று போடரஅள்ளி அருகே வாழைத்தோட்டபள்ளம் என்ற கிராமத்திற்கு வெங்கடசாமி உழவு பணிக்கு சென்றார். அங்கு தொட்டலான் என்பவரின் விவசாய நிலத்தில் டிராக்டரால் உழுது கொண்டிருந்தார். டிராக்டர் கவிழ்ந்து பலி அப்போது திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் டிராக்டர் அடியில் வெங்கடசாமி சிக்கினார். மேலும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், மகேந்திரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விரைந்து சென்று டிராக்டர் அடியில் சிக்கிய வெங்கடசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உழவு பணியின் போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
