
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டது மேட்டு நீரேத்தான் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் நேற்று நள்ளிரவு 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் புகுந்து சன்னதிக்கு முன்புள்ள உண்டியலை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்து தப்பினார்.
அவர் மஞ்சள் டி-சர்ட், ப்ளூ கலர் ட்ராக் சூட் அணிந்திருந்தார். கண்களை தவிர்த்து முகம் முழுவதையும் துணியால் மறைத்திருந்தார். அவர் உண்டியலை உடைத்து பணம் திருடும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இந்தக் கோவில் ஊரின் முகப்பு பகுதியில், இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்தி ருப்பதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இதே கோவிலில் ஏற்கனவே இந்த சம்பவத்தையும் சேர்த்து 3 முறை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. மேலும் உற்சவர் சிலையும் திருடு போனது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவும் இல்லை. பொருட்கள் மீட்கப்படவும் இல்லை. இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் சார்பில் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார், கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
