
ரெயில் விபத்தை தடுத்த வாலிபருக்கு பாராட்டு
சமயநல்லூர் – கூடல்நகர் பிரிவு ரெயில் பாதை அருகே, சுந்தரமகாலிங்கம் மகன் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் 15-ந் தேதி காலை 8 மணியளவில் வெளியே சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள ரெயில் பாதையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் தண்டவாளத்தை செல்போனில் போட்டோ எடுத்து, ரெயில்வே கேட் ஊழியர் பீட்டர் என்பவருக்கு அனுப்பி வைத்தார்.
அதனைப் பார்த்த பீட்டர், இது தொடர்பாக சமயநல்லூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அந்த நேரத்தில் திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு விரைவு ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுபற்றி அறிந்த மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், ரெயில் விபத்தை தடுத்த சூர்யாவுக்கு ரூ. 5000 ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, சூர்யாவின் தந்தை சுந்தர மகாலிங்கம், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோர் உடனிருந்தனர்.
