நீ போலீஸ் என்றால் நாங்கள் யாரு?’ – பெல்ட், வாக்கி டாக்கியோடு வசூல்செய்த போலி போலீஸ்சென்னையில், போலீஸ் அணியும் பெல்ட், போலி போலீஸ் ஐ.டி கார்டு, சிறுவர்கள் விளையாடும் பொம்மை வாக்கி டாக்கி என வலம் வந்ததோடு, வசூல் வேட்டையிலும் ஈடுபட்ட ‘போலி’ போலீஸ்காரரை திருமுல்லைவாயல் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை அயப்பாக்கம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர், ராமச்சந்திரன். இவர், அந்தப் பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்திவருகிறார். இவரின் கடைக்கு போலீஸ் அணியும் பெல்ட், கையில் வாக்கி டாக்கியோடு ஒருவர் வந்தார். அவர், தன்னை போலீஸ் என்று ராமச்சந்திரனிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். பிறகு, உன் கடையில் திருட்டுப் பொருள்களை வாங்குவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து விசாரிக்கத்தான் வந்தேன்' என்ற தோரணையில் கூறினார். அந்த நபரின் நடவடிக்கைகளைப் பார்த்த ராமச்சந்திரன், முதலில் அவர் உண்மையான போலீஸ் என்றே கருதினார் அதனால் அவரிடம், 'நான் திருட்டுப் பொருள்களை வாங்குவதில்லை' என்று ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால், அதை அந்த நபர் காதுகொடுத்து கேட்கவில்லை. 'உன்மீது வழக்கு போடாமலிருக்க, ஆயிரம் ரூபாய் கொடு' என்று கேட்டுள்ளார். வேறுவழியின்றி, ராமச்சந்திரனும் பணத்தைக் கொடுத்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்து அந்த நபர் சென்றுவிட்டார். அந்த நபரின் நடவடிக்கைகள்மீது சந்தேகமடைந்த ராமச்சந்திரன், திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். உதவி கமிஷனர் ஜான்சுந்தர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீஸார், ராமச்சந்திரன் கூறிய அடையாளங்கள் அடிப்படையில் விசாரித்தனர். விசாரணையில், போலீஸ் அணியும் பெல்ட், வாக்கி டாக்கியோடு வந்தவர் அயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பிரகாஷை மடக்கிப்பிடித்த போலீஸார், அவரிடமிருந்து போலீஸ் அணியும் பெல்ட், போலி ஐ.டி கார்டு, பொம்மை வாக்கி டாக்கி மற்றும் பணம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்துள்ளனர். போலீஸ் எனக்கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்ட பிரகாஷின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``பழைய இரும்புக்கடை நடத்திவரும் ராமச்சந்திரனிடம் போலீஸ் எனக்கூறி 1,000 ரூபாய் பணம் வசூலித்த பிரகாஷைக் கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரித்தபோது, 8-ம் வகுப்பு வரை படித்ததாகவும் வேலைக்கு செல்லாமல் ஊரைச்சுற்றி வந்ததாகவும் கூறினார். செலவுக்காக போலீஸ் எனக்கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். தன்னை போலீஸ் என நம்பவைக்க, போலீஸ் அணியும் பெல்ட்டை வாங்கியுள்ளார். பிறகு, போலீஸ் போல ஹேர் கட்டிங் செய்து கொண்டு வலம்வந்துள்ளார். யாருக்கும் தன்மீது சந்தேகம் வராமலிருக்க போலியாக போலீஸ் என ஐ.டி கார்டு தயாரித்துவைத்துள்ளார். அதோடு, சிறுவர்கள் விளையாடும் பொம்மை வாக்கி டாக்கி ஒன்றையும் கையில் எடுத்துக்கொண்டு சென்றுதான் பணம் கேட்டு மிரட்டி, ராமச்சந்திரனிடம் மிரட்டி பணம் பறித்த தகவல் தெரியவந்துள்ளது. வேறு யாரிடமாவது பிரகாஷ் பணம் பறித்துள்ளாரா என்று விசாரித்துவருகிறோம். பிரகாஷ் மீது மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். பிரகாஷிடம் விசாரித்த போலீஸார்,
நீ போலீஸ் என்றால் நாங்கள் யாரு’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். திருமுல்லைவாயல் பகுதியில் போலி போலீஸ்காராக வலம்வந்த பிரகாஷுக்கு, சிலர் மரியாதைகொடுத்துள்ளனர். அதனால்தான், போலீஸ் எனக்கூறி பிரகாஷ் வசூல் வேட்டையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரகாஷ் தயாரித்துள்ள ஐ.டி கார்டில் ஓரிஜினல் போலீஸ் ஐ.டி கார்டு போன்ற விவரங்கள் உள்ளன. அதனால் அவருக்கு போலியாக ஐ.டி கார்டு தயாரித்துக்கொடுத்த நபர் குறித்தும் திருமுல்லைவாயல் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
போலீஸ் நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்