
வேலை வாங்கித்தருவதாக ரூ. 12 லட்சம் மோசடி
விருதுநகர் மாவட்டம் நல்லமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது 38). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செட்டிகுளத்தை சேர்ந்த சிலர் அறிமுகமாகி உள்ளனர்.
அப்போது ஜேசுராஜா அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் உள்ளதாகவும், எளிதாக அரசு வேலை பெற்றுத்தர முடியும் என கூறியுள்ளார். இதனை நம்பிய செட்டிகுளத்தைச் சேர்ந்த பிச்சைமணி (50), அருண், பச்சைகோப்பன்பட்டியை சேர்ந்த அஜித்குமார், பசுமலையை சேர்ந்த பால்சாமி, அவரது மகன்கள் தீபன், முத்துக்குமார் ஆகியோர் அரசு வேலைக்காக ஜேசுராஜாவுக்கு ரூ. 17 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலை வாங்கித்தரவில்லை.
இதனால் அவர்கள் பணத்தை திருப்பித்தருமாறு கேட்டனர். இதில் ஜேசுராஜா ரூ. 5 லட்சத்தை மட்டும் கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
பணத்தை பறிகொடுத்த அவர்கள் ஜேசுராஜாவை கடத்த திட்டம் தீட்டினர். அதன்படி சம்பவத்தன்று நல்லமங்கலத்தில் ஜேசுராஜா தனது 2-வது மனைவி சங்கரேஸ்வரியுடன் இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் கணவன்-மனைவியை மிரட்டி காரில் கடத்தியது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டிகுளத்தில் உள்ள ஒரு வீட்டில் தம்பதியை அடைத்து வைத்து கடந்த 10 நாட்களுக்கு மேலாக பணம் கேட்டு ஜேசுராஜா-சங்கரேஸ்வரியை அந்த கும்பல் சித்ரவதை செய்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜேசுராஜா பலமுறை முயன்றும் முடியவில்லை.
சம்பவத்தன்று கடத்தல் கும்பல் வெளியே சென்றிருந்த நேரத்தில் ஜேசுராஜா தன்னிடம் இருந்த போன் மூலம் முதல் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செக்கானூரணி போலீ சார் வீட்டின் கதவை உடைத்து ஜேசுராஜா-சங்கரேஸ்வரியை மீட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மேற்கண்ட 6 பேரையும் தேடி வருகின்றனர்.
