போலீஸ் ஸ்பெஷல் ஆபரேஷன்… 20 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சத்துடன் வசமாக சிக்கிய பெண்!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், நானக்ராம்குடா பகுதியில் கஞ்சா ராணி என அழைக்கப்படும் நீது பாய் என்ற பெண், சைபராபாத் சிறப்பு அதிரடிக் குழுவின் (எஸ்ஓடி) டார்கெட்டில் கைது செய்யப்பட்டார். நேற்று நடந்த இந்த கைது சம்பவத்தில், 20 கிலோ கஞ்சா மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்துடன் கையும் களவுமாக நீது பாய் பிடிபட்டார். தெலுங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் கச்சிபௌலி போலீஸாருடன் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் நீது பாய் மட்டுமல்லாது, கலபதி நீது பாய், அவரது மகன் கலாபதி முன்னு சிங் மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களான கலபதி சுரேகா, கலாபதி மம்தா ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
அதோடு, தலைமறைவாக இருக்கும் நீது பாயின் கூட்டாளிகளான அங்குரி பாய், நேஹா பாய் ஆகியோரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையின் போது கஞ்சா வாங்க வரிசையில் நின்ற பலரை போலீஸார் கைது செய்தனர். இதில், தூல்பேட்டையை சேர்ந்த அங்குரி பாய் என்பவரிடமிருந்து கஞ்சாவை மொத்தமாகக் கொள்முதல் செய்து, 5 கிராம் எடையுள்ள பொட்டலங்களாக மாற்றி ஒரு பொட்டலம் ரூ.5,000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். தற்போது, Narcotic Drugs and Psychotropic Substances Act,1985 (NDPS) சட்டத்தின் கீழ் நீது பாய் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மென்பொருள் பொறியாளர்கள், உள்ளூர் இளைஞர்களுக்கு அதிகளவில் கஞ்சா விற்பனை செய்துவந்த நீது பாய், அரசியல் பிரமுகர்களிடம் நெருங்கி பழகிய வண்ணம், கடத்தல் பொருள்கள், போதைப்பொருள்கள் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டியது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, 16 வங்கிகளில் நீது பாய் சேமித்துள்ள ரூ.1.53 கோடி வைப்புத்தொகை கொண்ட 16 வங்கி கணக்குகளை முடக்கியிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், நீது பாய் மீது கஞ்சா கடத்தல் தொடர்பாக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், 2021-ல் கஞ்சா கடத்தலுக்காக PD சட்டத்தின் கீழ் ஒருமுறை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நீது பாய், அதற்கடுத்த ஆண்டு அக்டோபரில் சிறையிலிருந்து விடுவிப்பட்டார். அதேசமயம், நீது பாய் விடுவிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் ஆகஸ்டில் அவரின் குடும்ப உறுப்பினர்களான, கௌதம் சிங், நேஹா பாய் ஆகியோர் கோல்கொண்டா போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.