
கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது
மதுரை தெற்கு வாசல் போலீஸ் சரகத்தில் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை போலீசார் தினமும் ரோந்து சென்று வருகின்றனர். கண்மாய்கரை, ராஜமான் நகரில் ரோந்து சென்றனர். கங்கை அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார்.
அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் காமராஜர்புரம் இந்திரா நகரை சேர்ந்த முத்துக்குமார் மகன் எலி தினேஷ் (வயது 22) என்பது தெரியவந்தது.
இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் வலதுகரமாக திகழ்ந்தவர். எனக்கு நிறைய எதிரிகள் உண்டு. தற்காப்புக்காக அரிவாள் வைத்திருந்தேன்” என்று தெரிவித்தார். ஆயுதங்களுடன் திரிந்த எலி தினேஷை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பட்டி, அழகப்பன் நகரை சேர்ந்தவர் செல்வம் (45), ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சோலையழகுபுரம் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் மது குடிக்க பணம் கேட்டார். செல்வம் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த வாலிபர், ‘கத்தியால் குத்தி விடுவேன்’ என்று மிரட்டி, செல்வத்தின் சட்டைபையில் இருந்த ரூ.385-ஐ பறித்து தப்பினார்.
இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலையழகுபுரம், இந்திரா நகரை சேர்ந்த ஆட்டோ பிரவீன் (32) என்பவரை கைது செய்தனர். அவர் மீது அவனியாபுரம், ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
