
அரசின் ரகசியங்களை விற்க முயன்ற வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பைரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணாரெட்டி. இவருடைய மகன் உதயகுமார் (வயது 32). பி.இ.பட்டதாரி. இவர் கடந்த 2017 -ம் ஆண்டு கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வகத்தில் காண்டிராக்ட் அடிப்படையில் வேலை செய்தார்.
அப்போது ஆய்வகத்தில் இருந்த ரகசியம் காக்க வேண்டிய சான்றிதழ்கள், ஆய்வக உபகரணங்களை செல்போனில் புகைப்படம் எடுத்தார். பணியில் இருந்து வெளியேறிய உதயகுமார் புகைப்படம் எடுத்த ஆவணங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏஜென்சிகளிடம் விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இது நாட்டிற்கு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் மாதிரிப்பள்ளி அருகே சுற்றி வளைத்து உதயகுமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்து விசாரனை செய்து வருகின்றனர்.
