Police Department News

மக்கள் பிரச்சினையில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் பிரச்சினையில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த 5 மாவட்ட தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு சங்க பிரமுகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சிறு-குறு தொழில்களை மேம்படுத்துவது தொடர்பான தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலனை செய்யப்படும்.

தேனி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகள் கொடுத்து உள்ள மனுவை பரிசீலனை செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுரை மண்டல தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை குறித்து வைத்துக் கொண்டு உள்ளோம். இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்து பேசி, உங்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் போடப்பட்டது. எனவே விவசாயிகளுக்கான வருமானத்தை மேலும் பெருக்குவது தொடர்பாக தனி கொள்கை திட்டங்கள் வகுக்கப்படும்.

தமிழக அரசு பதவிக்கு வந்தபோது கொரோனா உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் இருந்தன. அதனையும் தாண்டி தமிழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது மக்கள் நலத் திட்டங்களை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. அரசாங்கத்தால் செய்ய முடிந்த கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றித் தருவோம்.

அரசாங்கத்தை தேடி மக்கள் வருவார்கள். ஆனால் இன்றைக்கு மக்களை தேடி அரசாங்கம் வந்துள்ளது. எங்களை தேடி நம்பிக்கையோடு வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்து உள்ளீர்கள். அதற்கு நான் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.