ஓட்டேரியில் வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேர் சிசிடிவி கேமரா இருந்தால்தானே தம்மை அடையாளம் கண்டு போலீஸார் பிடிப்பார்கள் என சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டுச் சென்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி சந்திரயோகி சமாதி தெருவில் வசிப்பவர் முனுசாமி(36) .இவர் இப்பகுதியில் நேற்றிரவு வந்தபோது ஒரு கும்பல் இவரை தாக்கி, கத்தியைக்காட்டி மிரட்டி கையிலிருந்த ரூ.1200- ரொக்கப்பணத்தைப் பறித்துச் சென்றது.
அப்போது அந்த கும்பலில் ஒருவன் அங்குள்ள சிசிடிவி கேமராவைக்காட்ட அங்கிருந்த 6 சிசிடிவி காமிராக்களைக்கண்ட அவர்கள் அதை உடைத்துவிட்டுச் சென்றனர். சிலர் தகராறில் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்குச் சென்ற போலீஸார் குற்றவாளிகளைத் தேடியபோது அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. போலீஸார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸார் தங்களை அடையாளம் காணக்கூடாது என அந்த வழிப்பறி இளைஞர்கள் 7 பேரும் அங்குள்ள 6 சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. கேமராக்கள் பதிவு மட்டுமே செய்யும், காட்சிகள் வேறொரு இடத்தில் சேமிக்கப்படும் என்பதை அவர்கள் அறியவில்லை. போலீஸார் அந்தப்பதிவுகளை ஆய்வு செய்ததில் அவர்கள் விபரம் கிடைத்தது.
உடனடியாக போலீஸார் விசாரணை நடத்தி சிசிடிவி கேமராக்களை உடைத்து, வழிப்பறியில் ஈடுபட்ட ஓட்டேரி மங்களாபுரத்தை சேர்ந்த நவீன்(எ) நவீன் குமார்(28), செல்வா(எ) செல்வராஜ்(21), நவீன்(எ)சஞ்சய்குமார்(21), அஜய் (எ)அஜய்குமார்(20), டர்கி(எ)சந்தோஷ்(19), மற்றும் அயனாவரத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வழிப்பறி செய்ததும், பொது இடத்தில் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடையூறாக இருந்ததால் காமிராக்களை உடைத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
பிடிபட்ட 7 பேர் மீதும் ஐபிசி பிரிவு 147(கலகம் செய்யும் சட்டவிரோதமான கூட்டமாக இருத்தல்), 148(கலகம் செய்யும் சட்டவிரோத கூட்டத்தில் ஆயுதங்களுடன் இருத்தல்), 341( பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படவிடாமல் தடுத்தல்), 294(b)(பொது இடத்தில் பிறருக்கு அவதூறு செய்தல்), 336(அடுத்தவர் உயிருக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் நடத்தல்), 392(கொள்ளையடித்தல்),397(தாக்கி காயப்படுத்திவிட்டு வழிப்பறி செய்தல்), 506(ii)(ஆயுதத்துடன் கொலை மிரட்டல் விடுப்பது) r/w. Sec 3 of TNPPDL Act (பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் 2 சிறுவர்களை சிறுவர் காப்பகத்திலும், 5 பேரை புழல் சிறையிலும் அடைத்தனர்.