
மதுபோதையால் நடக்கும் கொலைகள் அங்காங்கே அதிகரித்து வரும் நிலையில் சென்னை கே.கே.நகரில் ஒன்றாக மது அருந்திய நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாட்டிலால் குத்தப்பட்ட நண்பர் பலியானார்.
சென்னை கே.கே.நகர் ஆர்.கே.சண்முகம் சாலை ஜங்கஷன் அருகில் சாலையோரம் குடியிருப்பவர் கீரித்தலையன் (எ) சிவகுமார்(38). இவரது நண்பர் ராபர்ட்(40). இருவரும் கட்டடத்தொழிலாளர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கண்ட இடத்தில் அனைவரும் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகின்றனர்.
வேலை முடிந்தவுடன் ஓய்வு நேரத்தில் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அப்போது சிறிதாக வாக்குவாதம், வாய்த்தகராறு ஏற்படும். வழக்கம்போல் அனைவரும் வேலை முடிந்து நேற்றிரவு மது அருந்தி விட்டு தங்கள் குடியிருக்கும் இடம் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது ராபர்ட்டுக்கும், கீரித்தலையன் (எ) சிவகுமாருக்கும் மதுபோதையில் லேசாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாய்த்தகராறு முற்றியுள்ளது. அப்போது ராபர்ட் கீரி தலையனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த கீரி தலையன் தனது கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் திடீரென குத்தியுள்ளார்.
இதை அருகிலிருந்த யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இதில் கழுத்தில் பாட்டிலால் குத்து வாங்கிய ராபர்ட் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக கீரித்தலையன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ராபர்ட் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தப்பியோடிய கீரித்தலையனை தேடி வந்தனர். இதற்குள் சக தொழிலாளிகளே அவரைப்பிடித்து வந்து ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீஸார் அவர்மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.