
மதுரை பேரையூரில் ஆசிரியை வீட்டில் திருட்டு
பேரையூர் கே.ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஜெயக்கொடி. இவர் உத்தப்புரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டை விட்டு மகனுடன் ஆவுடையார் கோவிலுக்கு சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.
இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து வெளியூர் சென்றிருந்த ஜெயக்கொடிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதுபற்றி அவர் தனது வீட்டின் அருகே வசித்துவரும் உறவினர் நிரஞ்சனிடம் கூறினார்.
இதையடுத்து அவர் ஜெயக்கொடி வீட்டிற்கு சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த சில பொருட்கள் திருட்டு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் ஜெயக்கொடி வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.
பீரோவில் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை திருட்டில் ஈடுபட்டவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் அதிலிருந்த நகைகள் தப்பின. இந்த திருட்டு சம்பவம் குறித்து பேரையூர் போலீசில் நிரஞ்சன் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பேரையூர் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.





