
மதுரையில் வியாபாரியை காரில் கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்- 4 வாலிபர்கள் கைது
மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சகாதீன் (வயது33). இவர் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று சகாதீன் சொக்கிகுளத்தை சேர்ந்த நண்பர் ஷாகுல் அமீது என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சிறிது தூரம் சென்றபோது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை மறித்து சரமாரியாக தாக்கியது. பின்னர் 2 பேரையும் அந்த கும்பல் காரில் கடத்திச்சென்றது.
இதற்கிடையே கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் சகாதீன் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் கணவரை கடத்தியுள்ளோம். அவரை உயிருடன் விட வேண்டும் என்றால் ரூ. 50 லட்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன அவர் ரூ.1 லட்சம் திரட்டியுள்ளார். அதனை கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் மோட்டார் சைக்கிளில் வந்து வாங்கிச்சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் மறுநாள் காலை மனைவியிடம் செல்போனில் பேசிய சகாதீன் தான் ஜெய்ஹிந்து புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று சகாதீனை பார்த்தனர். அப்போது அவர் தலையில் வெட்டுக்காயங்களுடன் சிகிச்சை பெறுவது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த கடத்தலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார். அதன்படி வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனையின் பேரில் தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது, பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை தொடர்பாக சகாதீனுக்கும், முனிச்சாலை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த ஆத்தீப்(27) என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் ஆத்தீப், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சகாதீனை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சகாதீன், கடத்திய ஆத்தீப் மற்றும் உடந்தையாக இருந்த அப்துல் இம்ரான் (23), அகில் ஆசீப்(24), முகமது சபீக்(23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திருமணிசெல்வம், ஹரி, வாசீம், அருள், வசந்த் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.
