குமரியை தொடர்ந்து தென்காசியிலும் பரபரப்பு: சர்ச்சுக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை-மத போதகர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மத போதகராக ஸ்டான்லி குமார் (வயது 49) என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் மீது ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
போதகர் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பெண்களிடம் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு பாலியல் உறவுக்கு அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். எனது 30 வயது மகளுக்கு வயிற்றுவலி என்று சர்ச்சுக்கு அழைத்து சென்றேன். அப்போது அவளிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றார்.
இதுகுறித்து வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியதால் விட்டுவிட்டோம். ஆனால் அவர் மற்றொரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த பெண் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ஸ்டான்லி குமார் சர்ச்சுக்கு வரும் பல பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்ற விபரம் எங்களுக்கு தெரிய வந்துள்ளது.
சர்ச்சுக்குள் அதிநவீன சுழலும் வீடியோ-ஆடியோ பதிவுகளுடன் கூடிய காமிராக்களை பொருத்தி உள்ளார். அதன் மூலம் சர்ச்சுக்கு வரும் அனைவரையும் வீடியோ பதிவு செய்து பல பெண்களின் புகைப்படத்தினை மார்பிங் செய்து வைத்துள்ளதாக மிரட்டி வருகிறார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து டி.எஸ்.பி. சகாயஜோஸ் உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் செல்போனில் உள்ள ஆதாரங்களான வீடியோ க்கள், புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
பின்னர் ஸ்டான்லி குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் ஆலயத்திற்கு வந்த பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது பெண்களை மானபங்கம் படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கைதான ஸ்டான்லி குமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் தடிக்காரன் கோணம் ஆகும்.
குமரி மாவட்டத்தில் பல பெண்களிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசி மாவட்டத்திலும் போதகர் பாலியல் புகாரில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.