சென்னை பொன்னேரி அருகே மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற முதியவர்
பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மடிமை கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (50).
நேற்று இரவு மனைவியிடம் சமைத்து இருந்த மீன் குழம்பு சாப்பாட்டை கொண்டு வரும்படி ரவி கூறினார். ஆனால் சாப்பாட்டை எடுத்து வர ஜோதி தாமதம் செய்ததாக தெரிகிறது.
இதனை ரவி கண்டித்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்- மனைவியிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி இரும்பு கம்பியால் மனைவி ஜோதியின் தலையில் தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜோதி ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அலறல் சத்தம் கேட்டு வீட்டின் மாடியில் உள்ள அறையில் இருந்த மகன்கள் வந்து பார்த்த போது தாய் ஜோதி உயிருக்கு போராடியபடி கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே ஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கைதான ரவி வாய்பேச முடியாதவர் ஆவார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் இருவருக்கு வாய்பேச முடியாத நிலை உள்ளது. ஜோதி கூலிவேலை மற்றும் விவசாயம் செய்து குடும்ப செலவுகளை சமாளித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே ரவிக்கு சற்று மனநலம் பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்து உள்ளார். இதற்கு முன்பும் இரண்டு முறை மனைவி ஜோதியை, ரவி தாக்கி உள்ளார். அப்போது லேசான காயத்துடன் தப்பிய ஜோதி நேற்று ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.
சாப்பாடு கொடுக்க தாமதமானதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவரே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.