
ஆடிட்டர் உள்பட 3 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி- அரசு பள்ளி ஆசிரியரிடம் விசாரணை
மதுரை கோச்சடையில் உள்ள தேனி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். ஆடிட்டரான இவர் மதுரை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனது கார் டிரைவர் விவேகானந்தராஜா மூலம் உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த அரசு தொடக்க பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் எனது மகனுக்கு கல்வி அல்லது பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என கூறினார்.
இதை நம்பி ராமச்சந்திரனிடம் முதற்கட்டமாக ரூ. 6 லட்சம் கொடுத்தேன். இதுதவிர எனது நண்பர்கள் ராஜகுரு, சந்திரன் ஆகியோரும் உறவினர்களுக்கு அரசு வேலை தொடர்பாக ராமச்சந்திரனிடம் பணம் கொடுத்தனர். இதுவரை 3 பேரும் சேர்ந்து ரூ. 37 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தேன்.
பணத்தை பெற்றுக் கொண்ட அவர் வேலையும் வாங்கி தரவில்லை. எனவே பணத்தை தருமாறு திருப்பிக்கேட்டோம். இதில் ராமச்சந்திரன் ரூ. 2 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதம் ரூ. 35 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் மோசடி செய்து விட்டார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி வழக்கு பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
