
கோவையில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் கைது
கோவை வடவள்ளி பகுதியில் வசிப்பவர் 17 வயது சிறுமி. இவர் டிப்ளமோ படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது மாணவிக்கு 2 வயதாக இருந்தது. கைக்குழந்தையுடன் தவித்த அவரது தாயார் பெயிண்டர் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு சிறுமி தனது தாயார் மற்றும் அவரது 2-வது கணவர் பராமரிப்பிலேயே வளர்த்து வந்தார். பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் மாணவியின் மீது வளர்ப்பு தந்தையான பெயிண்டர் சபலம் கொண்டார்.
மனைவி வெளியில் சென்று இருந்த நேரத்தில் மகள் முறை கொண்டவர் என்பதையும் மறந்து அந்த மாணவிக்கு அவர் செக்ஸ் தொல்லை கொடுத்தார். பல நாட்கள் இவ்வாறு மாணவியை அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கினார். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி வெளியில் சொல்லாமல் தவித்து வந்தார்.
இந்தநிலையில் மாணவியின் தாயாருக்கும், அவரது 2-வது கணவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு பெயிண்டர் வெளியே சென்றார். அந்த சமயம் மாணவி, தனக்கு பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த விவரத்தை தாயாரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
