
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ரூ.40 ஆயிரம் கைவரிசை- ஏ.டி.எம். கார்டை திருடி கொள்ளையடித்த பெண் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது 33). இவர் சம்பவத்தன்று அரசு பஸ் மூலம் கடையநல்லூர் வந்து வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி விட்டு கடைய நல்லூர் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இருந்து காசிதர்மம் கிராமத்திற்கு அரசு பஸ்சில் சென்றார்.
பின்னர் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, அதில் இருந்த மணி பர்சை திருடி சென்றது தெரிய வந்தது அப்பொழுது கைப்பையை காணவில்லை. அதில் ஆயிரம் ரூபாய் மற்றும் ஏ.டி.எம். கார்டு அதற்கான ரகசிய நம்பர் ஆகியவை இருந்தது.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் ஏ.டி.எம்.மில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேஸ்வரி காசிதர்மத்தில் உள்ள தனியார் வங்கியில் கேட்ட போது, கடையநல்லூர் தனியார் வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து மர்மநபர்கள் பணத்தை எடுத்தது தெரியவந்தது.
முருகேஸ்வரி உடனடியாக கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பணம் எடுக்கப்பட்ட கடையநல்லூர் தனியார் வங்கிக்கு சென்று ஏ.டி.எம். மையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்த போது அதில் ஏ.டி.எம். மூலம் பணத்தை திருடிய மர்மப் பெண்ணின் உருவம் படம் தெரிந்தது.
அதன் பேரில் குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையில் தனிப்படை போலீசார் விஜயபாண்டி, மதியழகன், சிவராமகிருரைஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பி மர்மப் பெண்ணை தேடினர்.
விசாரணையில் அவர் கோவை தெற்கு மதுக்கரை அண்ணா சதுக்கம் அறிவியல் நகரை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி பழனியம்மாள் (55) என்பதும், அவர் ஊர், ஊராக சென்று பெண்களிடம் நைசாக ஏ.டி.எம். கார்டுகளை திருடி கைவரிசை காட்டும் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் கோவை சென்று பழனியம்மாளை கைது செய்தனர்.
