

காரிமங்கலம், உணவகங்கள் மற்றும் குடிநீர், குளிர்பான நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி., ஐ.ஏ.எஸ்., அவர்கள் கடந்த வாரம் குளிர்பானம் , குடிநீர் சுத்திகரிப்பு கேன்கள் மற்றும் பழக்கடை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனை வணிகர்களுக்கு, வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை வெளியிட்டதன் அடிப்படையில் வழிமுறைகள் முறையாக பின்பற்ற படுகின்றனவா என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் மேற்பார்வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், காரிமங்கலம் ஒன்றியத்தில், காரிமங்கலம், அனுமந்தபுரம், பொம்மள்ளி, பெரியாம்பட்டி மற்றும் பைசுஅள்ளி பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், குளிர்பானம், குடிநீர் மொத்த விற்பனை நிலையங்கள், குளிர்பான தயாரிப்பு, ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது வணிகர்கள் வழிகாட்டு நெறிமுறைகள் படி பானங்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்கள் தரமானதாகவும், உரிய காலாவதி தேதி உள்ள பொருள்களாக உள்ளதா, குடிநீர் பாட்டில்கள், கேன்கள், உரிய தரச் சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று தயாரிப்பு தேதி முடிவு தேதி அச்சிடப்பட்டுள்ளதா என்றும் பழச்சாறு குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தயாரிக்கும் பழ வகைகள் தரமானதாகவும், புதியதாகவும் முறையாக நீரால் கழுவி, பாதுகாக்கப்பட்ட குடிநீரால் தயாரிக்கிறார்களா என கண்காணிக்கப்பட்டது. அழுகிய பழங்களையோ, செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உபயோகிப்பதோ, விற்பனை செய்வதோ கூடாது என எச்சரிக்கப்பட்டது. உபயோகப்படுத்தும் உபகரணங்கள் அவ்வப்போது சுத்தம் பராமரிப்பதுடன் பணியாளர்களும் தன் சுத்தம் பராமரித்தல் வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இனிப்பு சுவை கூட்டவோ, பழங்கள் சீக்கிரம் பழுக்க செய்ய தேவையற்ற ரசாயன வேதிப்பொருளோ உபயோகப்படுத்தக் கூடாது எனவும் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் சான்றிதழ் பெற்று இருத்தல் அவசியம் எனவும் எடுக்காத, புதுப்பிக்காதவர்கள் உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அதை நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்க வலியுறுத்தப்பட்டது. இன்றைய ஆய்வில் ஒரு சில கடைகள் இருந்து 500 எம்எல் கொள்ளளவு உள்ள குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் கொள்ளளவுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள் உரிய தயாரிப்பு தேதி அச்சடிக்கப்படாமல் விற்பனையில் இருந்தது எச்சரித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இரண்டு உணவகங்களில் செயற்கை ரசாயன பவுடர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் இறைச்சியை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் உடன் இரண்டாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவகங்களில் குடிப்பதற்கு குடிநீர் பாதுகாக்கப்பட்ட குடிநீராக அல்லது சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பரிமாற வலியுறுத்தப்பட்டது. உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில் சில்லி சிக்கன், மீன் இறைச்சி பிரியாணி மற்றும் தக்காளி சாதம் போன்றவற்றில் செயற்கை நிறமூட்டிகள் கண்டிப்பாக சேர்க்கவே கூடாது எனவும் மேலும் சமையல் எண்ணெய் சூடுபடுத்த ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தாத வகையில் உபயோகம் செய்ய வேண்டும் எனவும் மீதமாகும் எண்ணெயை உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெய் RUCO) டீலர் இடம் அளித்து
உரிய தொகையை பெற்றுக் கொள்ள விழிப்புணர்வு செய்யப்பட்டது. ஆய்வில் காரிமங்கலம் அருகே சுகாதார குறைபாடுகள் காணப்பட்ட ஒரு குளிர்பான தயாரிப்பு நிறுவனத்திற்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் அளித்து ஏழு தினங்களுக்குள் குறைபாடுகள் களைய எச்சரித்து பதில் அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டது.
நுகர்வோரும் தாங்கள் வாங்கும் பொருள்கள் குளிர்பானங்கள் தரமானதாகவும், தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்கள், சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் கேன்கள் உரிய தயாரிப்பு தேதி, முடிவு தேதி, தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்பு உரிம எண் உள்ளனவா என்பதை கண்காணித்து பயன்படுத்த கேட்டுக் கொண்டனர்.
