
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மனைவியை அரிவாளால் வெட்டியவர் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ராஜாஜி மேற்கு தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 40). இவரது கணவர் மாயாண்டி (41). இவருக்கும் சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவருக்கும் தொடர்பு இருந்ததன் காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாயாண்டி மனைவியை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அவ்வப்போது மது போதையில் விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்து மாயாண்டி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் மது போதையில் வந்த மாயாண்டி விஜயலட்சுமி உடன் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மாயாண்டி தான் வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்ட முயன்றார். அப்போது தடுப்பதற்காக ஓடி வந்த அவர்களது மகன் கருப்பசாமிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதை பார்த்த மாயாண்டி மனைவிக்கும் மகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்து சாத்தூர் டவுன் போலீசில் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அமுதா (40). இவரது கணவர் பூமாரியப்பன். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பூமாரியப்பன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். மேலும் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மனைவியிடம் பூமாரியப்பன் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து விட்டார்.
இப்போது பூ மாரியப்பன் தான் வைத்திருந்த கத்தியால் அமுதாவை தாக்க முயற்சித்தார். இப்போது அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்து சத்தம் போட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு பூமாரியப்பன் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமாரியப்பனை கைது செய்தனர்
