
மதுரையில் வாளை காட்டி மிரட்டியவர் கைது
மதுரை மீனாட்சிநகர் கேட்லாக்ரோடு ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் சுந்தரபாண்டியன் (20). இவர் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு 7-வது குறுக்கு தெருவில் சென்று கொண்டிருந்தார். அவரை 2 பேர் வழிமறித்து வாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி தெரு பாண்டி மகன் வீரபூமு, அதே பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் பாண்டி என்ற பாண்டியராஜன் (47) ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாண்டி என்ற பாண்டியராஜனை கைது செய்தனர்.
கீரைத்துரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக பதுங்கிய வாலிபரை பிடித்தார். அவரிடம் விசாரித்தபோது மதுரை காமராஜர்புரம் குமரன் குறுக்கு தெரு குமரய்யா மகன் முனீசுவரன் (20) என்று தெரிய வந்தது.
அவரிடம் இருந்து வாள் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பகுதி வழியாக வருபவர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் நோக்கத்தில் முனீசுவரன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
