
கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தல் காருடன் 2,500 மதுபாட்டில்கள் பறிமுதல்
வலைசித்தூர் : வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டத்தில் அதிகளவு வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக எஸ்பி அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.
அதனடிப்படையில், எஸ்பி ஜோஸ்வா மாவட்டத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்பவர்கள், வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வருபவர்களை பிடிக்க தனி கவனம் செலுத்தி சோதனையில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பைரெட்டிபள்ளி சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணய்யா, போலீசார் குப்பம்- பலமனேர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
போலீசாரை கண்டதும் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்தி சென்றனர்.
போலீசார் துரத்துவதை அறிந்த காரில் இருந்த இருவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பியோடினார்கள்.
அப்போது போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றதில் ஒருவர் பிடிபட்டார்.
தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்ததில் 2500 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் கார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பிடிபட்டவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் பைரெட்டி பள்ளி மண்டலம், சரமட்ல பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சென்னா(29) என்பது தெரியவந்தது.
மேலும் தப்பியோடியவர் அதே கிராமத்தை சேர்ந்த உசேன் பாஷா என்பது கண்டறியப்பட்டது.
இருவரும் கர்நாடக மாநிலத்திற்கு சென்று அங்கு குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து சித்தூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது.
தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
பிடிபட்ட மது பாட்டில்களின் மதிப்பு ₹2.5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பலமனேர் டிஎஸ்பி சுதாகர் நிருபர்களிடம் கூறுகையில், சித்தூர் மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து சாலைகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
