
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- சென்னை வாலிபர் போக்சோவில் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கும், சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் 2 பேரும் தங்களது அந்தரங்க தகவல்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் 2 பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களுடைய புகைப்படங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
அதில் பேசிய நபரும், இன்ஸ்டாகிராம் முகப்பில் இருந்த நபரின் புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, அது குறித்து கேட்டபோது அழகான தோற்றத்தில் காட்சியளிக்கும் நபரை சமூக வலைதளத்தில் முகப்பில் வைத்தால் இளம்பெண்களை மயக்கலாம் என அந்த வாலிபர் கூறியதாக தெரிகிறது.
அந்த வாலிபரின் இந்த நடவடிக்கை மாணவிக்கு பிடிக்கவில்லை. எனவே தன்னுடன் பழகுவதை விட்டுவிடுமாறு மாணவி கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர், மாணவிக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் மற்றும் செயல்கள் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார். மேலும் அவர் சென்னை வாலிபரின் தொல்லை குறித்து தனது தந்தையுடன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சிவா (வயது19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
