
சிறுமி கற்பழிப்பு: சிறை வார்டன் போக்சோ வழக்கில் கைது
தருமபுரி மாவட்டம் அரூர் சிக்கனூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி. அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியின் பெற்றோர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி கூலிவேலைக்கு சென்று வருவதால் சிறுமி தனது பாட்டி வீட்டில் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஊருக்கு திரும்பி வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு 4 மாதங்களாக வயிற்றில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்தார்.
உடனே அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தார்.
இதில் அதே ஊரைச் சேர்ந்த லெனின்குமார் என்கிற பார்த்திபன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. லெனின்குமார் நீலகிரி மாவட்டம் குன்னூரில் சிறை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் லெனின்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வந்தனர். ஆனால், அவரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் லெனின்குமாரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சிறை வார்டன் லெனின்குமார் என்கிற பார்த்திபன் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 10-ந் தேதி ஆஜரானார். போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
