தென்காசி அருகே தி.மு.க. கவுன்சிலரை காரில் கடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 4 பேர் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் அப்துல்வகாப். இவர் கடையநல்லூர் நகராட்சியின் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இவர் தன்னை விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்திச் சென்றதாக கடையநல்லூர் போலீசில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கடையநல்லூரை சேர்ந்தவர் சேக் உதுமான்.
இவர் தற்போது துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவரிடம் வீட்டுமனை வாங்கித் தருவதாக கவுன்சிலர் அப்துல்வகாப் ரூ. 52 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் அவர் வீட்டுமனையும் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சேக்உதுமான் துபாயில் இருப்பதால் குடும்பத்தினர் மூலம் தான் கொடுத்த பணத்தை அப்துல் வகாப்பிடம் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேக் உதுமான், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் மூலம் அப்துல் வகாப்பிடம் இருந்து பணத்தை வாங்கித் தர கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்துல் வகாப் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் அச்சம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் (வயது 36), தென்காசி சட்டமன்ற தொகுதி செயலாளர் செல்வம் (42), செங்கோட்டை ஒன்றிய துணை செயலாளர் விவேக்(30), செங்கோட்டை ஒன்றிய நிர்வாகி இளையராஜா(34) ஆகியோர் அப்துல் வகாப்பிடம் பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பிய கவுன்சிலர் அப்துல் வகாப் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் ஆட்கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் துபாயில் இருக்கும் சேக் உதுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்திரன், செல்வம், விவேக், இளையராஜா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.