
தென்காசியில் கை, கால்களை கட்டி போட்டு மனைவியை கொடூரக்கொலை செய்த கணவர் கைது
தென்காசி நடுமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சித்ரா (வயது 48). இவர் பீடி சுற்றும் தொழிலாளி.
கடந்த 2 நாட்களாக இவரது வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த சித்ராவின் தம்பி குற்றாலநாதன், சந்திரனின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனது அக்கா குறித்து கேட்டதாகவும், அதற்கு சித்ராவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாகவும், தானும் அங்கேயே அவருடன் இருப்பதாக கூறி சந்திரன் போன் இணைப்பைத் துண்டித்துள்ளார். தொடர்ந்து மீண்டும் சந்திரனை தொடர்பு கொண்ட போது போன் இணைப்பு சுவிட்ச்-ஆப் என வந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த குற்றாலநாதன், அக்காவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் உடனடியாக தென்காசி போலீசாருக்கு அவர் தகவல் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நாகசங்கர் மற்றும் அனைத்து மகளீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி ஆகியோர் அடங்கிய போலீசார் நேரடியாக வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர் பின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது அங்கு கட்டிலில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். அவரது முகமும் சிதைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர் விசாரணையில் கணவன்-மனைவி இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதில் ஆத்திரமடைந்த சந்திரன் தனது மனைவி சித்ராவின் முகத்தை துணியால் மூடி சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கை-கால்களையும் கட்டி முகத்தை அமுக்கி கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் கொலையாளியை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாம்சன் அவர்களின் உத்தரவின் பேரிலும் DSP நாகசங்கர் அவர்களின் ஆலோசனையின் பேரிலும் தென்காசி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. மாடசாமி காவலர்கள் முத்துகுமார் ஆறுமுகப்பாண்டியன் சக்திவேல் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினர் இதற்கிடையில் திருச்செந்தூர் பகுதியில் சந்திரன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை குழுவினர் திருச்செந்தூர் விரைந்தனர் அங்கு அன்னச்சத்திரம் அருகே நின்ற சந்திரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
சந்திரனை தென்காசிக்கு அழைத்து வந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
