குண்டர் சட்ட உத்தரவில் ஆட்சியருக்கு பதிலாக ஐஜி, ஆணையர் கையெழுத்து: உயர் நீதிமன்றம் பரிந்துரை
குண்டர் சட்ட உத்தரவில் ஆட்சியருக்கு பதிலாக ஐஜி அல்லது காவல் ஆணையர்கள் கையெழுத்திடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ், தன் மகன் தமிழழகன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர்.
இம்மனு மீது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ”மனுதாரர் மகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. மாவட்டங்களில் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மேலும் பணிச்சுமை அதிகரிக்கிறது. எனவே, இந்த அதிகாரத்தை ஐஜி அல்லது காவல் ஆணையர்களுக்கு வழங்கும் வகையில் தேவையான சட்டத் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.