
மதுரை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருடிய பெண்
திருமங்கலம் நகர் அன்னகாமு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மனைவி தேவகி (வயது 73). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் குடும் பத்துடன் வசித்து வருகின்றனர்.
கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக தேவகி வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்துள்ளார்.
அவர் தன்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி அறிமுகம் செய்துகொண்டார். பின்னர் தேவகியிடம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியதோடு, பக்கத்து தெருவில் உள்ள அலுவலகத்திற்கு அதிகாரி வந்துள்ளார்.
அவரை பார்க்க வருமாறும், வரும்போது கழுத்தில் நகை எதுவும் அணிந்து வரக்கூடாது, எனவே நகையை கழுற்றி சாமி படத்திற்கு முன்பாக வைத்துவிடுமாறும் தெரிவித்துள்ளார். அதன்படி தேவகி நகையை கழற்றி வைத்ததும் பின்னால் சென்ற கில்லாடி பெண் அதனை அபேஸ் செய்துவிட்டு தலைமறைவானார். நகையை பறிகொடுத்த தேவகி கொடுத்த புகாரின் பேரில் நூதன திருட்டில் ஈடுபட்ட கில்லாடி பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
